Tuesday, September 30, 2008

இறைவனின் நினைப்பு!

செவிடர் குருடர் ஊமையர்
மூளை வளர்ச்சி குன்றியோர்
பக்கவாதம் கீழ்வாதம் முகவாதம்
இளம்பிள்ளை வாதம்
விபத்திலோ சர்க்கரையினாலோ
கைகால்கள் துண்டிக்கப்பட்டோர்
தொழுநோயாளர் போன்ற
ஊனமுற்றோரைச் சந்திக்க நேர்கையில்
மனம் வெதும்பார்
உள்ளம் உருகார்
வேதனை படார் தான் யார்?

இப்படியும் படைத்திருக்கின்றானே!
இதுவென்ன?
அச்சுறுத்தலா? தண்டனையா?
சமுதாயத்துக்கோர் பாடமா? உதாரணமா?
கல்மனம் கொண்டவனா?
மனமே இல்லாதவனா?
இவன் இறைவன் தானா? என
நொந்துபோய்ப் பேசுவதும்
படைத்தவனை நோதலும்
நியாயம் தான்! -ஆயினும்

ஊனமின்றி இருக்கும் நம்மில்
எத்தனை பேர்
இதனை உணர்கின்றார்?
இறைவனை நினைக்கின்றார்?
நன்றி செலுத்துகின்றார்?
வலியிலும் இன்னலிலும் மட்டுமே
இறைவனை நினைப்பவரன்றோ? நாம்!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

on 23-09-2008 21:59

நன்றி: அதிகாலை.

No comments: