Sunday, August 31, 2008

எதுவும் சாத்தியமே!


பறப்பன நடப்பன
ஊர்வன தவழ்வன என
அனைத்து உயிரினங்கட்கும்
சொந்தமாய் இல்லங்களாம்
மரங்கள் கூடுகள் புதர்கள்
புற்றுகள் குகைகள்...!

மனிதர்கட்கும் அவரவர்
வளம் வசதிகட்கேற்ப
சொந்த வீடுகள்
வாடகை வீடுகள்
குடிசைகள் சாலையோரங்கள்
இல்லங்களாய்...!

வாழ்நாளில்
சொந்தமாய் ஓர் வீடு
பெரும்பாலோரின் கனவு!
ஒரே நாளில்
ஊரையே அழித்துத்
தரைமட்டமாக்குதல்
சிலரின் நனவு!

உலகே வியக்கும்
வேடிக்கை பார்க்கும்
மனசாட்சியையும்
மனிதநேயத்தையும்
புதைத்துவிட்டவர்களின்
அரசியலை......

- இமாம் கவுஸ் மொய்தீன்

நன்றி:அதிகாலை.

23-08-2008 17:21

சுதந்திரமே உன்னால்...!


சுதந்திரம் அடைந்து
அறுபதாண்டு காலத்தில்
இன்றைய நிலையில்
நம் இந்திய நாடு...
உலக அரங்கையே
வியக்கத்தான் வைக்கிறது!

உற்பத்தியில் தன்னிறைவு
விவசாயத்தில் பசுமைப்புரட்சி
கல்வி அறிவியல் மருத்துவம்
தகவல் தொழில் நுட்பம்
பொறியியல் மற்றும்
பல துறைகளில் அபார வளர்ச்சி!

சொந்தமாய் விண்கோள்கள்
ஏவுகணைகள் அணு ஆயுதங்கள்
இயந்திரங்கள் வாகன உற்பத்தி யென
வேகமான முன்னேற்றம்.
எல்லாமே இமயத்தைக்
காட்டிலும் உயர்வுதான்
பெருமையும்தான்!

ஆயினும்...
செங்கோட்டையில்
தேசியக் கொடியை ஏற்றிவிட்டு
குண்டுகள் துளைக்காத
கண்ணாடிப் பேழையின்
உள்ளிருந்து
பிரதமரின் உரை...!

விமான இருப்புப்பாதை
பேருந்து நிலையங்களிலும்
வழிபாட்டுத் தலங்களிலும்
பொதுவிடங்களிலும்
பாதுகாப்புச் சோதனையின்
பெயரில் பொதுமக்கள்
வதைக்கப்படும் நிலை...!

பிரித்தாண்டவர்கள்
வெளியேறிவிட்ட பின்னரும்
அவர்கள் விட்டுச் சென்ற
பிரிவினை இனவாத
நச்சுவிதைகளின் தாக்கத்தால்
நிகழும் தீவிரவாத அச்சுறுத்தல்கள்
அழிவுகள்... இழப்புகள்...!

அன்னிய மாநிலத்தவர்
வெளியேற வேண்டும்
அன்றேல் உதைக்கப்படுவர்
வதைக்கப்படுவர் ஒழிக்கப்படுவரென
செயல்படும் சில இயக்கங்களின்
அச்சுறுத்தல்கள்...!

ஆணையங்களும் உச்சநீதிமன்றமும்
ஆணைகள் பிறப்பித்த பின்னரும்
அண்டை மாநிலங்கட்கு
நதிநீரைப் பகிர்ந்தளிக்க மறுத்து
தேசிய ஒருமைப்பாட்டுக்கு
ஊறுவிளைவிக்கும்
மாநிலங்களின் மனப்போக்கு...!

அன்றாட நடைமுறையாகிவிட்ட
கொலை கொள்ளை இலஞ்சம்
ஊழல்கள் சமூகவிரோதச் செயல்கள்...
சகோதரனே பகையாய் இருக்கையில்...
சுதந்திரமே உன்னால்
சுவையுமில்லை! மகிழ்வுமில்லை!!

-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.

சொத்துப் பங்கீடு!!


தந்தையின் சொத்து
மக்கட் கென்பர்!

அவரின் மறைவுக்குப் பின்
நிகழ்ந்தது சொத்துப் பங்கீடு!

மூத்தவருக்குச் சென்றன
வீடும் கடையும்!

அடுத்தவரின் பங்கில்
நஞ்சை புஞ்சைகள்!

மற்றவருக்குச் சென்றன
நகைகளும் மனையும்!

சகோதரிகளின் பங்கில்
கால்நடைகள்!

கடைசி மகனாய்
நான்....

என் பங்கில் வந்தன
கடனும் அம்மாவும்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.

நன்றி:முத்துக்கமலம்.

1-8-2008.