Wednesday, April 30, 2008

தேடலில்...! !

சாலை வசதிகளற்ற

குக்கிராமம்!

வறுமையின் மடியில்

கூடுதலாய் ஓர் குழந்தை!

தெருவிளக்கு தந்தது

கல்வி ஒளி!

உழைப்பும் உண்மையும் தந்தன

உயர்வும் ஊக்கமும்!





இன்றோ ஐம்பதைக்

கடந்த வயது!

வசதிகள் வளம்

நற்பெயர்

மதிப்பு மரியாதை

செல்வமும் செல்வாக்கும்

இவருடன் சேர

இவற்றுடன் சேர்ந்தன

கொழுப்பு கொதிப்பு

சர்க்கரையும்...!





உழைப்பைக் கொண்டு

வறுமையை வென்றவர்

நலத்தை மறந்து

வளத்தைத் தேடியதால்-இன்று

வளத்தைக் கொண்டு

நலத்தின் தேடலில்....

கிடைக்குமா...??



-திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்.

Thursday April 17, 2008

ஜடம்!!

மரத்தினால் ஆனதாலோ

உலோகத்தினால் ஆனதாலோ

கண்கூடாய்க் காண்பவற்றை

வெளி கூறாது

ஜடமாயிருந்திருந்து

ஜடமாகி விட்டதாலோ?

'ஜடம்' என்றே அழைக்கப்படுகிறது.


இதுவும் ஓர் நாடகமேடைதான்!

எத்தனை யெத்தனை காட்சிகள்

நாடகங்கள் அரங்கேற்றங்கள்

மந்திரங்கள் சத்தியங்கள்!

அனைத்தையும் கண்டு

ரசிப்பதோடு சரி!

மற்றபடி 'ஜடமே' தான்.


பெரிய மனிதர்

உத்தமர் சாதனையாளர்

மாவீரர் மதிப்புக்குரியவர்

எல்லாமே வெளித் தோற்றம் தான்!

நாற் சுவற்றுக்குள்

அவரின் மிருகத்தனம்

அப்பப்ப் பா .........!!

புலிகள் எலியாவதும்

யானைகள் பூனைகளாவதும்...

எதையும் காணாதது போல்

'ஜடமா'கவே... கட்டில் !

-இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம். -ஏப்ரல் 10 2008.

வார்ப்பு. - 22.4.2008.

பந்துக்களில்லாப் பந்துகள்!!

விலை போகும்

வரையில் மட்டுமே

பந்துகட்கு

மதிப்பு மரியாதை

அலங்காரம்

கௌரவம் எல்லாம்!


ஒன்றைப் போலின்றி

ஒவ்வொன்றுக்கும்

விளையாட்டுகளுக் கொப்பத்

தனித்தனி

ஆர விட்ட எடை அளவைகள்

தோல் ரப்பர் பிளாஸ்டிக் எனத்

தனித்தனி தன்மைகள்!


வகை வகையாய்

விளையாட்டுக்கள்

அவற்றின் ஆளுமையில்

திறமை தந்திரம் உக்தி

பலம் கொண்ட வீரர்களுக்கு

வெற்றிச் சான்றிதழ்கள்

கோப்பைகள் பரிசுகள்

பணமுடிப்புகள்

பாராட்டுக்கள்!


ஊடகப் ஒளிபரப்பும்

நேரடிப் பார்வையாளர்கட்கு

காட்சியாய் இருந்ததும்

மட்டுமே

அவை கண்ட

சுகம் சொர்க்கம்!


உபயோகத்தில் வந்து

அடி உதை பட்டு

கிழிந்து உருகுலைந்து

சின்னா பின்னமான

பந்துகட்குக் கிடைத்த

கௌரவம்

குப்பைமேடுகள்!


'என்ன மனிதரிவர்?

இருந்தவரையில்

பயன்படுத்திக் கொண்டு

குப்பையில் எறிதல் தான்

மனிதப் பண்போ?'

அலுத்துக் கொண்ட பந்துக்கு

குப்பை மேடு கூறியது


'ஆட்சி அதிகாரம்

அரசியல் செல்வாக்கு எனும்

விளையாட்டுக்களில்

உம்மைக் காட்டிலும்

மிகையாய்ச் சிதைந்தவர்

மனிதரில் தான் பற்பலர்'!

- இமாம்.கவுஸ் மொய்தீன் mailto:drimamgm2001@yahoo.co.in

கீற்று. - 1.4.2008.

தமிழோவியம். - 3.4.2008.

குறுங்கவிதைகள்!!

கூத்தும் மேளமும்

கொண்டாட்டமும் தாளமும்

பிணம் மட்டும் அமைதியாய்!

-------------------

கோடையின் கொடுமை

கசக்கவில்லை வேம்பு

இனிக்கிறது நிழல்!

-------------------

தோப்பில் பேய்!

திருடர் பயமில்லை

கனக்கிறது முதலாளிப்பை!

-------------------

பொதுவிடத்தில் கம்பம்

காலைத் தூக்கியபடி

நாயும் மனிதனும்!

-------------------

தண்ணீரில் கண்டம்

கோயில் குளத்தில்

சோதிடர் பிணம்!

-------------------

நேபாளத்திலும்

கொலை கொள்ளை

கூர்க்காக்கள் தூக்கம்!

-------------------

பிடித்தது புளியங்கொம்பு

தாங்கியது தூக்குக் கயிறு

வரதட்சணை!

-------------------

தொண்டரணிவகுப்பு

கட்சி ஊர்வலம்

பலியாடுகள்!

-------------------

பூகம்பமா?சூறாவளியா?

தொலைநோக்குச் சிந்தனை

எறும்பு விஞ்ஞானிகள்!

-------------------

முரசின் முழக்கம்

வாண வேடிக்கை

மழையழகு!

-------------------

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

1.4.2008.