Tuesday, September 30, 2008

கனிம நீர்!


குடிக்க குளிக்க
சமைக்க சலவைக்காக
கழுவ சுத்தமாயிருக்க
இறைவன் அளித்த கொடை
நீர்!

ஆறாய் வரும் வழியில்
கழிவுகளையும் இரசாயனங்களையும்
கலக்கச் செய்கின்றார்
மனிதர்களில்
ஓர் சாரார்!

விவசாயத்துக்கும்
மனிதத் தேவைகட்காகவும்
பயன்படுத்திக்
கொள்கின்றார்
ஓர் சாரார்!

புட்டியில் அடைத்து
'கனிம நீர்'
எனும் பெயரில்
காசுக்கு விற்கின்றார்
ஓர் சாரார்!

அதில் அடைந்து கிடக்கும்
நுண்கிருமிகள் எத்தனை?
அறியாமலேயே வாங்கி
பருகிக் கொண்டிருக்கின்றார்
ஓர் சாரார்!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

Last update : 23-09-2008 22:49

நன்றி: அதிகாலை.

இறைவனின் நினைப்பு!

செவிடர் குருடர் ஊமையர்
மூளை வளர்ச்சி குன்றியோர்
பக்கவாதம் கீழ்வாதம் முகவாதம்
இளம்பிள்ளை வாதம்
விபத்திலோ சர்க்கரையினாலோ
கைகால்கள் துண்டிக்கப்பட்டோர்
தொழுநோயாளர் போன்ற
ஊனமுற்றோரைச் சந்திக்க நேர்கையில்
மனம் வெதும்பார்
உள்ளம் உருகார்
வேதனை படார் தான் யார்?

இப்படியும் படைத்திருக்கின்றானே!
இதுவென்ன?
அச்சுறுத்தலா? தண்டனையா?
சமுதாயத்துக்கோர் பாடமா? உதாரணமா?
கல்மனம் கொண்டவனா?
மனமே இல்லாதவனா?
இவன் இறைவன் தானா? என
நொந்துபோய்ப் பேசுவதும்
படைத்தவனை நோதலும்
நியாயம் தான்! -ஆயினும்

ஊனமின்றி இருக்கும் நம்மில்
எத்தனை பேர்
இதனை உணர்கின்றார்?
இறைவனை நினைக்கின்றார்?
நன்றி செலுத்துகின்றார்?
வலியிலும் இன்னலிலும் மட்டுமே
இறைவனை நினைப்பவரன்றோ? நாம்!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

on 23-09-2008 21:59

நன்றி: அதிகாலை.

நாளை எவரோ?

சவ ஊர்வலம்!
கூத்தும் மேளமும்
முழங்கியபடி
முன்னே செல்லும் சிலர்...

காசுக்காகவோ
கடமைக்காகவோ
பிணத்தைச் சும‌ந்தபடி
பின் செல்லும் சிலர்...

சோகத்தில் துயரத்தில்
தோய்ந்த முகத்துடனும்
பிரிவின் வேதனையுடனும்
பின் தொடரும் சிலர்...

வீதியோரத்தில்
நின்று கொண்டு
வேடிக்கை
பார்த்தபடி சிலர்...

பிணம் மட்டும்
அமைதியாய் உரைக்காமல்
உணர்த்திக் கொண்டிருந்தது
''இன்று நான்
நாளை எவரோ?

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

Last update : 11-09-2008 01:26

நன்றி: அதிகாலை.

ஹை கூ !!



தெரிந்த கேள்வி
தெரியாத விடை
இறைவன்!

மேடையில் சாதியொழிப்பு
வீட்டுக் கூடத்தில்
சாதிக்கூட்டம்!

சுட்டப் பழமா? சுடாத பழமா?
சுடும் பழம் தான்!
விலைவாசி!

இருளில் கலவரம்
பகலில் சமாதானப் புறா!
அரசியல்வாதி.

சாலையோரக் கடவுள்
சம்பாதித்துக் கொடுக்கிறது
சில்லறைக்காசு!

ஐந்தறிவை ஏமாற்றும்
ஆறறிவு
வைக்கோல் கன்று !

முகவர்கள் மோசடி
வேலை தேடி அலைகிறது
வெளிநாட்டு மோகம் !

முள்ளும் புதரும்
பஞ்சுமெத்தை தான்
கௌதாரிக் கூடு !

கட்டியது மாளிகை
கண்டது குடிசை
கட்டிடத் தொழிலாளி !

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

செப் 18 2008 .

நன்றி: தமிழோவியம்.

இமாம் குறுங்கவிதைகள்!!


சாதிமதப் பிரிவுகள்
சரியான புத்திமதி
பூகம்பம்!

எவரின் கண் பட்டதோ
உடைந்து சிதறியது
திருஷ்டிப் பூசனி!

பன்றிகள் உலவும் வீதி!
பறையருக்குத் தடை!
மனுதர்மம்.

காவிரியிலா நீரில்லை?
கரை புரள்கிறது
கானல் நீர்.

இன்று இவர்!
நாளை எவரோ?
மந்திரி வாழ்வு!

கொள்ளை போனாலும்
தளர்வதில்லை
தேனீக்கள்!

ஆடை கட்டிய ஆபாசம்
நிர்வாணக் கடைவிரிப்பு
மஞ்சள் பத்திரிகை.

பழகியதில் புரிந்தது
மனித வடிவில்
பச்சோந்தி!

இன்றும் தெரியாத விடை
முதலில் போட்டது யார்?
ஒற்றையடிப்பாதை!

-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.

16-9-2008.

நன்றி: முத்துக்கமலம்.

ஹைகூ!!


மண்ணில் பிறப்பு!
மண்ணுக்கே இரை!
மனிதன்

படைத்தவனையே
படைக்கும் மனிதர்
சிலையாய் கடவுள்!

கணுக்காலில் காயம்!
கண்ணில் நீர்!
உடன்பிறந்த பாசம்

பயிர்நிலம் ஆக்கிரமிப்பு!
பெயருக்குத் தானோ
வேலிக்காத்தான்!

நடிகரின் மரணம்!
திரையுலகமே கண்ணீர் வடித்தது
கிளிசரின்!

Last update: 02-09-2008 05:05

நன்றி:அதிகாலை.