Thursday, March 27, 2008

நாற்பது நிலைக்க...!!

நாள்தோறும் காலையில்

ஊடகங்களைத் திறந்தாலே

பிழைப்புக்காக வங்கக் கடலில்

மீன் பிடிக்கச் சென்ற

தமிழக மீனவரைச்

சிறை பிடிப்பதும்

உயிர் பறிப்பதும்

தவறாமல் வரும் செய்திகள்!

வானம் பொய்க்கலாம்

பூமி பொய்க்கலாம்

விண்மீன்கள் பொய்க்கலாம்

விண்கோள்கள் பொய்க்கலாம்

இந்நிகழ்வுகள் மட்டும்

பொய்ப்பதே இல்லை!


மத்தியில் ஆள

முழுதாய் நாற்பதைத் தந்திட்ட

தமிழகத்தின் அரசு

மத்திய அரசுக்கு

வேண்டுகோள் விடுப்பதும்

இலங்கை அரசுக்கு

கண்டனம் தெரிவிப்பதும்

தொடர்ந்தாலும்

அவர்களின் போக்கில் மாற்றம்.....?


இந்தியத் தமிழர்கள் மீது

நிகழும் அச்சுறுத்தல்கள்

தடுக்கப்பட வேண்டும்!

இலங்கைத் தமிழர்களின் உரிமைகள்

காக்கப்பட வேண்டும்!

பிரச்சினைகள் யாவும்

தீர்க்கப்பட வேண்டும்!

குறைகள் குற்றங்கள்

களையப்பட வேண்டும்!

நிறைகள் இன்னும்

மிகைப்படுத்தல் வேண்டும்!

ஆளும் அரசுகள்

உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே

இனிவரும் தேர்தலிலும்

இனியவை நாற்பது

இனிதே நிலைக்கும்!

- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

மார்ச் 20 2008

தண்டனையின் பிடியில்....! !

காலம் மாறிவிட்டது!

நீதிமன்றங்களிலும்

பெரும்

மாற்றம்!

நீதி -

நிதியின்பக்கம்!

நியாயம் -

விலையின் பக்கம்!

அநியாயங்களின்

கைகளில் நியாயம்!

இப்போதெல்லாம்

கட்டப் பஞ்சாயத்துக்கள்

வெளியில் நடப்பதில்லை!

கண்கள்

கட்டப்பட்ட நிலையில்

நீதி தேவதை!

வெற்றிக் களிப்பில்

சீருடை அணிந்தோர்!

சட்டம் தன் கடமையில்

தவறுவதில்லை!

தண்டனையின்

பிடியில் தான்

தர்மம்!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வார்ப்பு.

3-3-2008.

சொர்க்க பூமி!!

வீரத் தலைவனின்

விவேகத்தில்

நிகழ்ந்த

தவறு!

விலை போனவர்களால்

வீழ்ச்சியடைந்தது

நாடு!


இன்றோ

நே(நா)ச நாடுகளின்

ஆக்கிரமிப்பில்

கற்பு முதற்கொண்டு

எல்லாமே கொள்ளை போகிறது

அல்லது

விற்பனையாகிறது!


ஆக்கிரமிப்பாளர்கள்

'சொர்க்க பூமி ஆக்குவோம்'

என்கிற தம் வாக்குறுதியை

நிறைவேற்றி இருக்கிறார்கள்!

'ஈராக்'

அவர்களுக்குச்

சொர்க்க பூமியே!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வார்ப்பு.

24-2-2008.

நாளைய நட்சத்திரங்கள்!!

அன்று....

தலையைப் படிய வாரி

எண்ணெய் முகத்தில் வடிய

சீருடை முழுதாயணிந்து

சுமக்க முடியாமல்

புத்தக மூட்டையைச் சுமந்து

கூட்ட நெரிசலிலும் இடிபாடுகளிலும்

சிக்கித் தவித்துப்

பேருந்தில் பயணம் செய்து

பள்ளிக்குச் சென்றபோது

பரிகாசம் பேசியோருண்டு!

பரிதாபம் கொண்டோருண்டு!

விமர்சித்தோரும் பலருண்டு!


இன்று....

படிப்பு முடிந்துவிட்டது

பட்டம் பெற்றாகிவிட்டது

பணியும் கிடைத்துவிட்டது

கை நிறையச் சம்பளம்

வளங்கள் வசதிகள்

வாகனங்கள் ஏவலாட்களென

சொந்த வாழ்வில்....

என்னுடன் புத்தகம் சுமந்த பலரும்

என்னைப் போன்றே

வசதிகள் வளமுடன்....


பணிக்குச் செல்லும் நேரம்

பள்ளிக்குச் செல்வோரைப்

பார்க்கிறேன்!

முதுகில் புத்தக மூட்டை....

அதில் புத்தகங்களுடன்

அவரவரின் எதிர்காலம்

பெற்றோரின் கனவுகள்

கற்பனைகள் உழைப்பு

நம்பிக்கையென அனைத்தையும்

சுமந்து செல்லும் சிறார்கள்!


இதயம் பூரிக்கிறது

நம் நாட்டின்

நாளைய மன்னர்களைக்

காண்கையில்!

இன்று நாம் ஒளிர்வதைப் போல்

நாளை ஒளிர இருக்கும்

இந்தியாவின்

நம்பிக்கை நட்சத்திரங்கள்!!

- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம் - பிப்ரவரி 28 2008.


முத்துக்கமலம் - 29-2-2008.

Friday, March 14, 2008

சர்க்கரை!!

இனிப்பானது

சுவையானது

அனைவருக்கும்

பிடித்தமானது!

லட்டு பூந்தி

மைசூர் பாக்

அல்வா பழங்கள்... எனப்

பற்பல உருவங்களில்

உலா வருவது!


விருந்தோம்பலும்

மங்கல நிகழ்ச்சிகளும்

இவை யன்றி

இருப்பதில்லை!

தன் இனிப்பாலும்

சுவையாலும்

தானோர் 'கொடூரன்'

என்பதை உணராது

செய்து விடும்

தன்மை மிக்கது!


ஒருவர்

தன் வாழ்நாளில்

உட் கொண்ட

சர்க்கரைத் துகள்களைக்

காட்டிலும்

அது உட்கொண்ட

மனித உயிர்கள்

பற்பல மடங்கு!


'இன்சுலின்'

சுரப்பின் குறைபாடே

இந் நோய்க்குக் காரணம்!

உடனே உணர்ந்து

செயல்படா விட்டால்

விழிகள்

சிறுநீரகங்கள்

இதயம்

மூளை

நரம்பு மண்டலமென

ஒவ்வொன்றாய்ப் பாதிக்கும்!


உடலில் தொன்றும்

சிறுபுண் பெரிதாகும்

பீடித்த பகுதியைச்

சிறுகச் சிறுக

அரிக்கும்! அழிக்கும்!

அழிந்த பகுதி

பகுதி பகுதியாய்

தவணைகளில்

வெட்டி எடுக்கப்படும்!

இறுதியில்

உயிருக்கே உலைவைக்கும்!


சர்க்கரையுடன்

பகைமை.....!

நலம் காக்கும்.

உறவு......?

நலமும் வளமும்

நிம்மதியும் அழிக்கும்!

ஆன்மாவைச்

சாந்தி அடைய வைத்தே

அது சாந்தி அடையும்!!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வார்ப்பு.

பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-02-18

நா காக்க!!

'அளவுக்கு மீறினால்

அமிர்தமும் நஞ்சு'

'அளவோடு இருந்தால்

வளமோடு வாழலாம்'

நோயற்ற வாழ்வே

குறையற்ற செல்வம்'

போன்ற பொன்மொழிகளை

நினைவு கொள்ளாததால்

இன்று

முப்பது நாற்பதுகளில்

இருப்போரெல்லாம்

மருத்துவமனைகளின்

தொடர் வாசத்தில்!


சர்க்கரை

இரத்த அழுத்தம்

உடற் பருமன்

நெஞ்சு வலி

கழுத்து வலி

முதுகு வலி

மூட்டு வலி

உடற் சோர்வு

நரம்புத் தளர்ச்சியென

நீண்டு கொண்டே போகும்

உடலியல் பிரச்சினைகள்!


காரணம் யாதென

ஆராய்ந்து பார்ப்பின்

உணவுக் கட்டுப்பாடும்

உடற் பயிற்சியின்மையுமே!

'யாகாவாராயினும்

நாகாக்க' என

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே

சொல்லி வைத்தார்

பொய்யா மொழிப் புலவர்!

நாமும் நினைவில் கொள்வோம்

அவர் 'நாகாக்க' சொன்னது

சொல்லில் மட்டுமல்ல

சுவையிலும் தான்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வார்ப்பு.

27-1-2008.