Saturday, December 29, 2007

அழிவில்லாதது!!

'நீ எனக்குத் தாயுமில்லை

நான் உனக்கு மகனுமில்லை'!


'நீ எனக்கு மகனுமில்லை

நான் உனக்கு அப்பனுமில்லை'!


'நீ என் உடன் பிறப்புமில்லை

நான் உன் கூடப் பிறக்கவுமில்லை'!


'நீ யாரோ

நான் யாரோ'!


இப்படியாக

கோபத்தின் வேகத்தில்

வெறுப்பின் விளிம்பில்

விரக்தியின் உச்சத்தில்

எத்தனையெத்தனையோ

வார்த்தைகளின் வெளிப்பாடு

அறியாமை இருளில்

உணர்ச்சிகளின் தாக்கத்தில்

நம் அன்றாட வாழ்வில்!


வாயின் வார்த்தைகள்

நிஜமாகுமா?

வாளால் வெட்டுவதால்

நீர் துண்டாகி விடுமா?

ஒட்டும் உறவுகளும்

நட்பும் வேண்டுமானால்

கூடலாம் பிரியலாம்!

அழியலாம்!


இறைவனால் உருவாக்கப்பட்ட

இரத்த உறவுகளுக்குள்

உயிர்ப் பிரிவுகள்

உடலழிவுகள் உண்டு!

ஆனால்

உறவுப் பிரிவுகளோ

அழிவுகளோ

என்றென்றும் இல்லை!

இறப்பே இல்லா

உறவுகள் இவை!!


-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

டிசம்பர் 27 2007.

Friday, December 21, 2007

தியாகத் திருநாள்!!

எண்ணற்ற

தியாகங்கள்

இவ்வையத்தில்

வரலாற்றிலும்

வாழ்விலும்!


நாட்டுக்காக

மொழிக்காக

உறவுக்காக

நட்புக்காக

காதலுக்காகவென!


உயிர்

உறவுகள்

உடமைகள்

சொத்துக்கள்

சுகங்களெனப்

பலவற்றின் தியாகம்!


ஆயினும்

ஆயிரமாயிரம்

ஆண்டுகளாய்ப்

போற்றப்பட்டு வரும்

ஒரே தியாகம்

இப்ராஹீம்(அலை)நபி

அவர்களுடையது தான்!


தள்ளாத முதுமையில்

தனக்குப் பிறந்த

ஒரே மகனை

இறைவனின் ஆணையேற்றுப்

பலிப்பீடம் ஏற்றியது!


சுய நலமே சூழ்ந்திருக்கும்

இவ்வுலகில் நாம்

தியாக உணர்வு

பெற்றிட

உணர்த்தும் நாளே

தியாகத் திருநாள்

பக்ரீத்!!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

15-12-2007.

Thursday, December 20, 2007

நா காக்க! !

'அளவுக்கு மீறினால்

அமிழ்தமும் நஞ்சு'

'அளவோடு இருந்தால்

வளமோடு வாழலாம்'

நோயற்ற வாழ்வே

குறையற்ற செல்வம்'

போன்ற பொன்மொழிகளை

நினைவு கொள்ளாததால்

இன்று

முப்பது நாற்பதுகளில்

இருப்போரெல்லாம்

மருத்துவமனைகளின்

தொடர் வாசத்தில்!


சர்க்கரை

இரத்த அழுத்தம்

உடற் பருமன்

நெஞ்சு வலி

கழுத்து வலி

முதுகு வலி

மூட்டு வலி

உடற் சோர்வு

நரம்புத் தளர்ச்சியென

நீண்டு கொண்டே போகும்

உடலியல் பிரச்சினைகள்!


காரணம் யாதென

ஆராய்ந்து பார்ப்பின்

உணவுக் கட்டுப்பாடும்

உடற் பயிற்சியின்மையுமே!

'யாகாவாராயினும்

நாகாக்க' என

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே

சொல்லி வைத்தார்

பொய்யா மொழிப் புலவர்!

நாமும் நினைவில் கொள்வோம்

அவர் 'நாகாக்க' சொன்னது

சொல்லில் மட்டுமல்ல

சுவையிலும் தான் !!



oooOooo


கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

டிசம்பர் 20 2007

ஈழம் உனக்கேயடா!!

எப்படி மாறிவிட்டது உலகம்- மனிதா

எப்படி மாறிவிட்டது.

உரிமை கேட்பவன்

ஒடுக்கப் படுகிறான்

உரிமை மறுப்பவன்

மதிக்கப் படுகிறான்.


தன் இனத்துக்காக

மொழிக்காக

நாட்டுக்காகப்

போராடுபவன் - தெரு

நாயைப் போல் அடிக்கப்படுகிறான்!

தீவிரவாதி

சமூக விரோதி

அழிவுச் சக்தியென

நிந்திக்கப் படுகிறான்!


நிராயுதப் பாணியாய்

இருப்பவன் பக்கம்

நியாயமும் நிற்பதில்லை!

நீதிகேட்கும் போராளிப்பக்கம்

நித்தம் நித்தம் தொல்லை!

ஆயுதம் தாங்கி

அக்கிரமம் செய்பவரை

எவரும் கேட்பதில்லை!

அவன் ஊரையழித்தாலும்

உயிர்களழித்தாலும் - உலகம்

கண்டு கொள்வதில்லை.


ஈழம் ஆனாலும்

ஈராக் ஆனாலும்

குற்றவாளியாய்க்

கருதப்படுபவன்

மண்ணின் மைந்தனே!

கல்லை எறிந்து

எதிர்ப்பைக் காட்டுபவன்

தீவிர வாதியாம்!

ஆயுதம் ஏந்தி

உயிரை அழிப்பவன்

பாதுகாவலனாம்!


இருளில் மூழ்கி

உறங்கிக் கிடக்குது

உலகம் இப்போதடா!

விழித்துக் கிடந்து

போர் செய்துக் கிடப்பது

வீரர் நீங்களடா!

விடியும் நிச்சயம்

மடியும் பகைமை

வெற்றி உன்னதடா!

விடுதலை கிடைக்கும்

உலகே போற்றும்

தமிழீழம் உனக்கேயடா!!



எழுதியவர்: இமாம்.கவுஸ் மொய்தீன்
தமிழமுதம்.
திங்கட்கிழமை, 17 டிசம்பர். 2007.

Tuesday, December 11, 2007

வீழ்ந்தபின் ஞானம்!!

மரங்கள் நிறைந்த

பரந்த தோட்டம்!

குயில் மைனா

புறா சிட்டு கிளி

காக்கை கௌதாரி

அணில் பட்டாம்பூச்சிகளின்

கானங்கள் கொஞ்சல்கள்

ஆட்டம் பாட்டங்களின்

நிகழ்விடமாய்

எப்போதும் கலகலப்பாய்!


தென்னை பனை

மா பலா முந்திரி

சீதா பப்பாளி யென

இருக்கும் பல்வகை மரங்களுடன்

இல்லாத பேய்களையும்

பாம்புகளையும் சேர்த்து

வளர்ப்பதால்

வளம் கொழிக்கிறது

தோட்டமும்

முதலாளிப் பையும்!


தன்னால் தான்

தோட்டம்

வளம் கொழிக்கிறது

என்றெ ஒவ்வொரு மரமும்

நினைக்கத் துவங்கியதால்

மரங்களுக்கிடையே

விளைச்சலுக்குச் சமமாய்

அகந்தை ஆணவம்

பொறாமை பூசல்களும்

வளமாய் செழிப்பாய்...!


தம்மோடு வாழும்

புற்பூண்டுகளை

அற்பமாய் நினைப்பதிலும்

ஏளனம் செய்வதிலும்

இளக்காரம் பேசுவதிலும்

மட்டும்

தழைத்தோங்கி இருந்தது

மரங்களுக்கிடையேயான

ஒற்றுமையும்

ஒருமைப்பாடும்!


இயற்கைக் கென்ன

சீற்றமோ?

திடீரெனப் பேய்மழையும்

புயலும் வீச

வெள்ளம் சூழ்ந்ததெங்கும்!

வெள்ளம் வடிந்தபின்

வந்து பார்த்தார்

உரிமையாளர்!

நொடிந்து போனார்

வயிற்றிலும் வாயிலும்

அடித்துக் கொண்டார்!


வேரோடு வீழ்ந்துகிடந்தன

மரங்களனைத்தும்!

உடன் அவற்றின்

அகந்தையும் ஆணவமும்

பொறாமையும் பூசல்களும்!

புற்பூண்டுகள் மட்டும்

எப்போதும் போல்

பாதிப்பு மிகையின்றி!

வீழ்ந்தபின் ஞானம் வந்து

என்ன பயன்?


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வார்ப்பு.

பிரசுரிக்கப்பட்ட திகதி:2007-12-09