Sunday, January 13, 2008

பொங்கட்டும் பொங்கல்!!

பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் பொங்கல்!

தமிழர் இல்லந்தோறும்.


பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் மகிழ்ச்சி!

தமிழர் உள்ளந்தோறும்.


பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் தமிழுணர்வு!

தமிழர் இதயந்தோறும்.


பொங்குக பொங்கல்!

முழங்கட்டும் தமிழே!

தமிழர் நா யாவும்.


பொங்குக பொங்கல்!

தழைக்கட்டும் முயற்சி!

தமிழர் ஏற்றம் பெறவே.


பொங்குக பொங்கல்!

வேண்டுக இறைவனை!

தமிழர் ஈழம் பெறவே.


பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் இனஉணர்வு!

செழிக்கட்டும் தமிழர் வாழ்வே.


பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் விவேகம்!

அழிக தமிழர் பகையே!


-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்,ஜனவரி 10 2008.

முத்துக்கமலம்,14-1-2008.

Friday, January 4, 2008

என்ன குறை உன்னில் தமிழா?

என்ன குறை உன்னில் தமிழா?

என்றேனும் சிந்தித்தாயா?


சாரம் இல்லாதவனா? - நீ

சோரம் போனவனா?


உறக்கத்தில் இருக்கின்றாயா?

உணர்வின்றி இருக்கின்றாயா?


கல்வியில் உழைப்பில் திறமையில்

சிறப்பாய் இருக்கின்ற நீ!


மொழியில் இனஉணர்வில் மட்டும்

மந்தமாய் இருக்கின்றாயே!


அந்நிய மொழிகளையெல்லாம்

அழகாய் உரைக்கின்றாய் நீ!


உன்மொழி தமிழை மட்டும்

கலந்தே கதைக்கின்றாய் நீ!


கங்கை கொண்டான்

கடாரம் வென்றான் என -முன்னர்

எத்தனைப் பெருமைகள் உனக்கு!


தமிழனின் வீரம் மானம்

எல்லாமே ஏட்டில் இன்று!


அண்டையில் ஈழத்தமிழன்

அடிக்கப்படுகின்றான் ஒடுக்கப்படுகின்றான்!


அகதியாய் நாட்டை விட்டே

விரட்டப் படுகின்றான்!


தமிழகம் மட்டுமின்றி

மலேசியா சிங்கப்பூரிலும்

நிறைவாய் இருக்கும் உனக்கு...


ஈழத்தின் நிகழ்வுகள் கண்டுமோர்

கண்டனக் கணை கூடவா

தொடுக்க முடியவில்லை? ஏன்?


அந்நியம் ஆட்கொண்டதாலா? - நீ

அந்நியத்தை அரவணைத்துக் கொண்டதாலா?


தாய்ப்பால் பருகாததாலா?

புட்டிப்பால் பருகியதாலா?


என்ன குறை உன்னில் தமிழா?

இப் புத்தாண்டிலாவது சிந்திப்பாயா?



எழுதியவர்: இமாம்.கவுஸ் மொய்தீன்.

தமிழமுதம்.

04 ஜனவரி 2008.

Tuesday, January 1, 2008

இப் புத்தாண்டிலாவது உணருமா?

அச்சு ஊடகம்

காட்சி ஊடகம்

எதைத் திறந்தாலும்

கொலை கொள்ளை

கடத்தல் கற்பழிப்பு

நாச வேலைகள்

அத்துமீறல்கள்

அராஜகங்கள்

ஆக்கிரமிப்புகளென

நாள்தோரும்

நெஞ்சைப் பதைக்கும்

செய்திகளாய்

அழிவுச்சக்திகளின்

ஆதிக்கம்!


" ஒரு கன்னத்தில்

அறைந்தால்

மறு கன்னத்தைத்

திருப்பிக் காட்டு"

என்றார் ஏசுபிரான்!

அவரின் போதனைகளைக்

காற்றில் விட்டதின்

விளைவே

இந்நிகழ்வுகளின்

பிரவாகம்!


அஹிம்சையைக்

கடைபிடித்ததுடன் -அதைப்

போதிக்கவும் செய்தார்

மஹாத்மா காந்தி!

இந்தியாவும் கடைபிடித்தது!

அதன் மகத்தான

சாதனையே

இந்தியாவின் விடுதலை!

உலகமே கண்டு

வியந்து போற்றும்

இப் பேருண்மையை

விடுதலைக்காக இன்னும்

போராடிக் கொண்டிருக்கும்

நாடுகள்

இப் புத்தாண்டிலாவது

உணருமா?


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

வார்ப்பு.

31.12.2007.