Wednesday, July 30, 2008

'சைக்கோ' !!


நாள்தோறும் விடிந்தும்

விடியாமலேயே இருக்கின்றது

காலைப் பொழுது!


ஊடகங்களைத் திறக்க

பதைபதைக்கிறது

மனம்!


'சைக்கோ'வின் அடுத்த பலி

உறக்கத்திலிருக்கும்

அப்பாவி எவருமா?


'சைக்கோ' என நினைத்ததால்

கொல்லப்பட்டிருக்கும்

அப்பாவி எவருமா?


'சைக்கோ'வின் பெயரால்

கைதாகி இருக்கும்

அப்பாவி எவருமா?


கைதானவரும் கொல்லப்பட்டவரும்

'சைக்கோ'வாய் இருக்கும் பட்சத்தில்

தொடரும் கொடூரக் கொலைகளுக்குக்

காரணம் யார்? யார்? யார்?


பொதுமக்களுக்கு வேண்டுமாயின்

புதிராய் பீதியாய் இருக்கலாம்

'சைக்கோ'!


ஸ்காட்லாண்ட் யார்டுக்கு

இணையானதாகக் கருதப்படும்

தமிழகக் காவல்துறைக்குமா...?


தமிழோவியத்தில் - இமாம் கவுஸ் மொய்தீன்.

ஜூலை 31 2008

கோடிகள் கொடுத்தாலும்...!!


அம்மா......!

ஊரில் இருக்கின்றார்!

கேட்போர்க்கெல்லாம்

பதிலாய் இருந்த

நிகழ் காலம்...

அவரின் மரணத்தால்

இறந்த காலமானது!



அவருக்குச் செய்த

பணிவிடைகள்

கடுகாய்ச் சுறுங்கிவிட

தவறியவை

மலை போல்

மனக்கண் முன்...!



தன் உதிரத்தை

உணவாய்

உணர்வாய்

ஊட்டியது...



தாலாட்டு பாடி

தொட்டிலாட்டி

உறங்க வைத்தது...



நிலாவை

நட்சத்திரங்களை

மின்மினிகளைக் காட்டி

சோறூட்டியது...



உடல் நலமில்லாத

நேரங்களில்

உண்ணாமல் உறங்காமல்

சேவை செய்தது...



விரல் பிடித்து

நடை எழுத்து

சித்திரம்

பழக்கியது...



மழலையைக் கேட்டுப்

பூரித்தது

புன்முறுவல் பூத்தது

பெருமை கொண்டது...



குழந்தைகட்கு

வலியேதுமென்றால்

துடித்தது துவண்டது

துயரம் கொண்டது...



ஒவ் வொன்றும்

தொடர் காட்சியாய்

நெஞ்சை

வருட...



உடன்

வைத்திருந்துப்

பணிவிடை செய்துப்

பார்த்திருந் திருக்கலாமே...!



விம்மியது இதயம்

அருவிகளாயின விழிகள்

கசக்கிப் பிழிந்தது

குற்ற மனப்பான்மை!



விலகி இருந்ததாலும்

பிரிந்து விட்டதாலும்

இழந்த சுகம்

கோடிகள் கொடுத்தாலும்

திரும்புமோ?



தமிழோவியத்தில் - இமாம் கவுஸ் மொய்தீன்.

ஜூலை 17 2008.

முத்துக்கமலத்தில் - 15.7.2008.

காந்தி பிறந்த நாடு !!


மீண்டும் மீண்டும்

தொடந்து கொண்டுதானிருக்கின்றன

நச்சுச் சாராய சாவுகள்!


மீண்டும் மீண்டும்

தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது

விதவை அநாதைகளின் பெருக்கம்!



மீண்டும் மீண்டும்

தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது

உறவு நட்புகளின் ஒப்பாரி!



நின்று கொல்லும் நஞ்சு- மது!

நிறுத்தாமல் குடித்தாதால்

இன்று கொன்றிருக்கிறது நச்சுச் சாராயம்!



கொலைகள் கொள்ளைகள்

விலையேற்றம் பணவீக்கமென

அனைத்தும் வளர்பிறையாய்....!



அனைத்துத் துறைகளிலுமே

வேகமாய் முன்னேறி வருகிறது

நம் நாடு!



சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில்

முழுகவனத்துடன்....

காவல்துறை!



சூடான பரபரப்பான

செய்திகளின் தேடலில்....

ஊடகங்கள்!



கேள்வி கண்டனக் கணைகளை

வீசுவதில்... சலிப்படையாத

எதிர்க்கட்சிகள்!



ஆர்ப்பாடமின்றி அகிம்சைவழியில்

கோலொச்சிக் கொண்டிருக்கிறது

நம் அரசு!



காந்தி பிறந்த நாட்டில்

நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

பெருமையுடன்....


தமிழோவியத்தில்- இமாம் கவுஸ் மொய்தீன்.

ஜூன் 26 2008

சாதனை!!


படிப்பில் பந்தயத்தில்

வீரத்தில் விவேகத்தில்

திறமையில் உயர்வில்

விஞ்சியிருப்பதும் முந்தியிருப்பதும்

சாதனை!


படைத்திட்ட சாதனைகளை

விஞ்சுவதும் மிஞ்சுவதும்

தனித்தன்மையுடன்

ஒளிர்வதும்

சாதனை!


உண்மை உழைப்பு

கடமை கண்ணியம்

கட்டுப்பாடு புத்திசாலித்தனத்தால்

சாதிப்பதே

சாதனை!


மனித உயிரின்

வாழ்வுக்கும் உயர்வுக்கும்

ஆக்கத்துக்கும் இன்றியமையாதவற்றை

கண்டுபிடித்தல்

சாதனை!


விண்கோள்கள் ஏவுகணைகள்

விண்வெளி ஆராய்ச்சி

கணினிகள் தகவல்தொழில்நுட்பம்

மாற்றுறுப்புப் பொருத்தங்கள் எல்லாமே

சாதனைகள்!


உயிர்காக்கும் மருந்துகள்

நோயறியும் பொறிகள்

வானொலி தொலைக்காட்சி

தொலைப்பேசி செல்பேசிகள் எல்லாமே

சாதனைகள்!


விண்ணில் மண்ணில்

நீரில் பயணம் செய்ய

விதவிதமான அதிவெக

வாகனங்கள் எல்லாமே

சாதனைகள்!


விவசாயத்தில் பசுமைப்புரட்சி

உற்பத்தியில் தன்னிறைவு

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்

விமானங்களில் பறந்து கொண்டிருக்கும்

நம் பட்டதாரிகள் எல்லாமே

சாதனைகள்!


மகாத்மா முதற்கொண்டு

சாதனையாளர்களையும் சாதனைகளையும்

பட்டியலிட்டால் எண்ணிமாளாதவையாய்

எத்தனை யெத்தனையோ

சாதனைகள்!


புகை போதை விபச்சாரம்

சமூகவிரோதம் ஏழ்மையில்லா

சமுதாயம் காணும் இனியநாளே

இந்தியாவின் மகத்தான உன்னதமான

சாதனையாகும்!!

நன்றி:தமிழோவியம்.

ஜூன் 19 2008