Thursday, June 19, 2008

ஒப்பாரும் மிக்காரும்...?


பொது விடங்களில்
துப்புவதிலும்
நான்கு பேர்
கூடியிருக்குமிடத்தில்
மூக்கையும் சளியையும் சிந்தி
அசுத்தப் படுத்துவதிலும்
உண்ட வாழையின்
தோலை வீதியில்
வீசி எறிவதிலும்
பொதுவிடங்களில்
சுவர்களைத் தேடி
சிறுநீர் அபிஷேகம்
செய்வதிலும்
எச்சத்தையும் மிச்சத்தையும்
கண்ட இடங்களில்
போடுவதிலும் நம்மை
ஒப்பாரோ மிக்காரோ தான்... எவர்?
வார்ப்பில் -இமாம்.கவுஸ் மொய்தீன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-06-16

காற்று!



வசந்தம் வாடை
அனல் புயல்
சூறாவளி புழுதிக்காற்றெனப்
பருவத்துக்குப் பருவம்
பற்பல அவதாரங்களில்...
பிராணவாயு
கரியமிலவாயுவென
உயிரினங்களுக்கும்
தாவரங்களுக்குமிடையே
சுவாசப் பரிமாற்றத்தில்...
காடுகளின் அழிப்பு

இரசாயனங்களின்
வெளியேற்றம்
தூசு மாசுகளின்
ஆதிக்கத்தால் இன்று
நச்சு பரப்பும் நிலையில்...
காற்றின்
கனிவும் சீற்றமும்
பாகுபாடு பார்ப்பதில்லை
கனிவுடன் இருக்கும் வரைதான்
கண்ணியத்துடன் இருக்கும்...
உணர்ந்துகொள் மனிதா...!
இதன் இதமும்
இனிமையும் இன்பமும்
இலக்கியங்கள் கதைத்திடும்!
சினமும் சீற்றமும் கடுமையும்
வரலாறு உரைத்திடும்!
வார்ப்பில் -இமாம்.கவுஸ் மொய்தீன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-06-15.
தமிழோவியம் - ஜூன் 05 2008

Tuesday, June 17, 2008

நீரின்றி உயிரில்லை!


பூமிப்பந்தின் பரப்பில்
மூன்றில் இருபங்கு நீர்!

உயிருக்கும் உடலுக்கும்
இன்றியமையாத் தேவை நீர்!

உணவு பானங்கள் பழங்கள்
அனைத்திலுமே நீர்!

ஊற்று அருவி ஆறு மேகம் உப்புகளின்
தோற்றமும் தோன்றலும் நீர்!

சுவைக்க சுத்தம் சுகாதாரமாயிருக்க
அழுக்கைப் போக்க நீர்!

மனித இனத்தின் மகிழ்ச்சியிலும்
துக்கத்திலும் நீர்!

சூடாக்கினாலும் குளிர்வித்தாலும்
தணிந்திருந்தாலும் நீரே நீர்!

நீரின்றி ஏது இயக்கம்?
நீரின்றி உயிரில்லை!

நீரின்றி உலகுமில்லை!
எங்கும் எதிலும் நீர் நீர் நீர்!!

முத்துக்கமலத்தில் -இமாம்.கவுஸ் மொய்தீன்.
2.6.2008.
தமிழோவியத்தில் -மே 29 2008

பந்துக்களில்லாப் பந்துகள்!!


விலை போகும்

வரையில் மட்டுமே
பந்துகட்கு
மதிப்பு மரியாதை
அலங்காரம்
கௌரவம் எல்லாம்!
ஒன்றைப் போலின்றி
ஒவ்வொன்றுக்கும்
விளையாட்டுகளுக் கொப்பத்
தனித்தனி
ஆர விட்ட எடை அளவைகள்
தோல் ரப்பர் பிளாஸ்டிக் எனத்
தனித்தனி தன்மைகள்!
வகை வகையாய்
விளையாட்டுக்கள்
அவற்றின் ஆளுமையில்
திறமை தந்திரம் உக்தி
பலம் கொண்ட வீரர்களுக்கு
வெற்றிச் சான்றிதழ்கள்
கோப்பைகள் பரிசுகள்
பணமுடிப்புகள் பாராட்டுக்கள்!
ஊடக ஒளிபரப்பும்
நேரடிப் பார்வையாளர்கட்கு
காட்சியாய்
இருந்ததும் மட்டுமே
அவை கண்ட
சுகம் சொர்க்கம்!
உபயோகத்தில் வந்து

அடி உதை பட்டு
கிழிந்து உருகுலைந்து
சின்னா பின்னமான

பந்துகட்குக்
கிடைத்த கௌரவம்
குப்பைமேடுகள்!
'என்ன மனிதரிவர்?
இருந்தவரையில்
பயன்படுத்திக் கொண்டு
குப்பையில் எறிதல் தான்
மனிதப் பண்போ?'
அலுத்துக் கொண்ட பந்துக்கு
குப்பை மேடு கூறியது
'ஆட்சி அதிகாரம்
அரசியல் செல்வாக்கு எனும்
விளாயாட்டுக்களில்
உம்மைக் காட்டிலும்
மிகையாய்ச் சிதைந்தவர்
மனிதரில் தான் பற்பலர்'!
வார்ப்பில் -இமாம்.கவுஸ் மொய்தீன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-06-01
கீற்றில் - 29.5.2008.

Monday, June 16, 2008

குறுங்கவிதைகள் !!











உயர் சாதிக்காரன்

தாழ்த்திக் காட்டும்

நிழல்!


சாதிக் கோடரிகள்

மோதிக் கொண்டன

இரத்தம் குடிக்கும் நரி!


உறக்கத்தில் உடல்

விழிப்பில் உள்மனம்

கனவுத் தொழிற்சாலை!


ஆட்கள் கடத்தல்

உறுப்புகள் களவாடல்

க(உ)ருப்புச் சந்தை!


புரட்சிகளை வெடிக்கும்

போர்களை முடிக்கும்

பேனா முனை!


மிருகச் சாவு கண்டனம்

மனிதச் சாவு வேடிக்கை

உலக அதிசயம்!


உள்ளங்கையில் அரிப்பு

பண வருமானம் தான்

மருத்துவருக்கு!


என்னால் நிறையும் கடல்

நதியின் திமிர்ப்பேச்சு

நகைசிந்தும் அருவி!


ஆசிரியர் வாக்கு பலித்தது

அரபு நாடுகளில்

ஆடு மேய்க்கும் தொழில்!


ஆயிரம் கனவுகள்

இலட்சங்கள் சம்பாதிக்க

பாலைவன வாழ்க்கை!


முத்துக்கமலத்தில்:இமாம்.கவுஸ் மொய்தீன்.

29.5.2008.

இயற்கை !!

அண்டங்கள் ஆகாயங்கள்
இயற்கை!

வானும் விண்மீன்களும்
இயற்கை!

சூரியனும் ஒளியும்
இயற்கை!

அதைச் சுற்றிவரும் கிரகங்கள்
இயற்கை!

நேரமும் காலமும்
இயற்கை!

மேகமும் மின்னலும்
இயற்கை!

காற்றும் மழையும்
இயற்கை!

நீரும் நிலமும்
இயற்கை!

நிலநடுக்கமும் எரிமலைகளும்
இயற்கை!

ஆறுகள் கடல்கள் அருவிகள்
இயற்கை!

வறட்சியும் பசுமையும்
இயற்கை!

உயிரினங்கள் அனைத்தும்
இயற்கை!

அவற்றின் பிறப்பும் இறப்பும்
இயற்கை!

உயிரும் உடலும்
இயற்கை!

இரவும் பகலும்
இயற்கை!

உறக்கமும் விழிப்பும்
இயற்கை!

பசியும் தாகமும்
இயற்கை!

அன்பும் பாசமும்
இயற்கை!

இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றும்
இயற்கை!

அவற்றின் மாட்சியும் மகிமையும்
இயற்கை! இயற்கை !!

தமிழோவியத்தில்:கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

மே 22 2008

தடுப்பூசி மரணங்கள்!!

கண்டம் விட்டுக்

கண்டம் பாயும்

அழிவுச் சக்திமிக்க

ஏவுகணைகள்!


வானிலும்

ஒற்றர்களாய்

விண்கோள்கள்!


விண்ணில் மண்ணில்

நீரில் பயணம் செய்திட

புதுமைகள் மிக்க

வாகனங்கள்!


உலகின் நிகழ்வுகளை

உடனே அறிந்திட

தொலைக்காட்சி

வானொலிகள்!


பூவுலகின்

மூலைமுடுக்கெல்லாம்

தொடர்பு கொண்டிட

தொலைபேசி செல்பேசிகள்!


பரந்த பூபாளத்தைச்

சிறு அறைக்குள்

சுறுக்கிவிட்ட

தகவல் தொழில் நுட்பம்!


வெப்ப குளிர் பிரதேசங்களில்

வசிப்பவர் வசதிக்காக

குளிரூட்டி

வெப்பமூட்டிகள்!


பழுதடைந்த

உறுப்புகளுக்குப் பதில்

மாற்றுறுப்பு

பொருத்தங்கள்!


இன்னும் சொல்லிமாளா

எத்தனை யெத்தனையோ

சாதனைகள் புதுமைகள்

இவ்வறிவியல் யுகத்தில்!


இருப்பினும்

அடிக்கடி நிகழ்கின்றன

நோய்தடுப்பு மருந்துகளால்

மழலையரின் மரணங்கள்!


இவற்றுக் கெல்லாம்

யார் பொறுப்பு?

எப்படி தவிர்க்கப் போகிறோம்?



திண்ணை,

Thursday May 8, 2008


--------------------------------------------------------------------------------


drimamgm@hotmail.com