Monday, November 26, 2007

நாம் எப்படி?

மும்மாறி பொழியவில்லை

வரட்சி வாடுகிறது

பஞ்சம் பொசுக்குகிறது

பரிகாரம்தான் என்ன?


'கழுதைக்கும் கழுதைக்கும்(அ)

கழுதைக்கும் தவளைக்கும்

மணம் முடித்தல்'

ஐதீகம்

செய்து பார்க்கின்றோம்!


பையனுக்குச் செவ்வாய் தோழம்

பரிகாரம் என்ன?

'வாழைமரத்துக்குத்

தாலி கட்டுவியுங்கள்'

ஐதீகம்

செய்து பார்க்கின்றோம்!


நாற் சந்தி!

மேள தாளம் முழங்க

காளைக்கும் பசுவுக்கும்

வரதட்சணையில்லா திருமணம்

நடத்தி வைக்கின்றான்

பூம் பூம் மாட்டுக்காரன்!

பார்த்து ரசிக்கின்றோம்.


நாட்டில் ஊரில் எத்தனை

முதிர்கன்னியர் இன்றைக்கும்!

பரிகாரம் என்ன?

சிந்தித்திருப்போமா?


'நல்லார் ஒருவர் உளரேல்

அவர் பொருட்டு எல்லோருக்கும்

பெய்யும் மழை' என்கிறது

பழம்பெரும் பாட்டு!


மழை பெய்யாமைக்கு

நல்லோரில்லாமையே காரணமா?

மற்றவரில் நல்லோரில்லை சரி!

நாம் எப்படி?

-திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்.

Thursday November 15, 2007.

No comments: