'பழைய சோறு தின்று விட்டு
பள்ளிக் கூடம் சென்றிட்டு
படிப்புதனைக் கற்று வந்தது
போதுமடா கண்ணா!
வீட்டில் எரிக்கச் சுள்ளியில்லை,
பொங்குதற்கு அரிசியில்லை,
என் கூலி வருமானம்
ஒரு வேளைக்குப் போதவில்லை,
நிறைவாய்ப் படிக்க வைக்க
நாதியாய் எவருமில்லை.
இருப்பது கொண்டு படிக்கவைக்க
இல்லாமை தவிர வேறில்லை.
"குடிக்காதே! குடிக்காதே!"என்று
அடித்துக் கொண்டேன் என் தலையில்
கேட்டானா? பாவி மனிதன்
நிறுத்தாமல் குடித்திட்டான்
ஈரல் நோயால் படுத்திட்டான்.
கடன்தனை ஏற்றி விட்டு
கண்களையும் மூடிட்டான்.
'நீயும் என்னுடன் வந்திடடா!
எசமானரிடம் சொல்லிடுவேன்,
வேலை வாங்கித் தந்திடுவேன்.
இருவரும் உழைத்திடுவோம்
உன்னுடன் பிறந்தோரைக் காத்திடுவோம்'.
சொன்ன தாயும் ஊனமானாள்
சாலை விபத்தினிலே!
ஈரைந்து வயதினிலே
ஓரைந்து உடன் பிறப்புக்கள்!
உழைத்துச் சம்பாதித்து
காக்கும் பொறுப்பிவனுக்கு.
நாள் முழுக்க உழைத்திட்டாலும்
பெருமானமில்லா வருமானம்.
இருந்தும் காக்கிறதே தன்மானம்!
இப்படியே தொடர்ந்திட்டது
வாழ்க்கையும் சில காலம்.
இப்போதோ வந்து விட்டது
வேலைக்கும் போதாக்காலம்!
'குழந்தைகளைத் தொழிலாளியாய் வேலைக்கு
வைக்காதே' என்றது புதுச் சட்டம்.
அதன் பயனாய் கிடைத்திட்டது
பரிசாய் இவனுக்கு வேலை நீக்கம்!
விற்றுத் தின்ன மிச்சமில்லை
வேறு வழி தெரியவில்லை
எளிதாய் சம்பாதிக்க
பிச்சையைத் தவிர வழியில்லை!
இத்தொழிலிலிருந்து இவனைக் காக்க
சட்டத்திற்கு நேரமில்லை!
-இமாம்.கவுஸ் மொய்தீன்.
முத்துக்கமலம்.
1-6-2007.
Monday, November 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment