வெள்ளை நிறம்
தூய்மையைக் குறிக்கும்!
வெள்ளை ஆடைகள்
கௌரவம் அளிக்கும்!
வெள்ளைச் சந்தை
மதிப்பைக் கூட்டும்!
வெள்ளைப் பணம்
மரியாதை கொடுக்கும்!
வெள்ளை மனம்
பார்ப்பவரை ஈர்க்கும்!
வெள்ளைக் கொடி
சமாதானத்தைக் குறிக்கும்!
ஆம்! ஏற்புடையது தான்!
கருப்பு தாழ்ந்தது!
கருப்பர் அடிமைகள்!
கருப்புப் பணம்
கேவலமானது!
கருப்புச் சந்தை
கண்டனத்துக் குறியதென
கருப்பைக் கீழ்த்தரமாகவும்
வெள்ளையை உயர்ந்ததாகவும்
உலகெங்கும் விதைத்து
விட்டுச் சென்றிருக்கிறது
வெள்ளை ஏகாதிபத்தியம்!
உண்மையில்
போரில் சரணடைவோர்
ஏந்துகின்ற கொடி வெள்ளை!
இன்றைக்கும் பல இடங்களில்
கைம் பெண்கள்
அணியும் ஆடை வெள்ளை!
இலஞ்சம் வாங்கி
ஊழல் செய்து
சமுதாயத்தின்
இரத்தத்தை உறிஞ்சும்
அரசியல்வாதிகளும்
அதிகாரவர்க்கமும்
தம்மை மறைக்க
உடுத்தும் உடை வெள்ளை!
வெள்ளை!
தூய்மையானது தான்!
வெள்ளைக்குப் பின்
தம்மை
மறைத்துக் கொண்டிருப்போர்
தூய்மையானவர் தானா?
-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.
தமிழோவியம்.
ஜூன் 14 2007
Tuesday, November 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment