Sunday, November 25, 2007

ஆர்ப்பாட்ட வாழ்க்கையில்....!!

ஆர்ப்பாட்ட வாழ்க்கையில்....!!
------------------------------

# உயிர் வதை
எதிர்த்துப் போராட்டம்
பட்டாடைகள்
கம்பளி சால்வைகள்
தோல் பைகள்
காலணிகள் அணிந்தவர்கள்
ஆர்ப்பாட்டத்தில்...


# கட்டில்கள்
மேசை நாற்காலிகள்
அலமாரிகளென
வீடு நிறைய
மரச் சாமான்கள்
புதிதாய் எதுவும்
சந்தையில் வந்தால்
அதையும் வாங்கிட ஆசை!
இத்தனைக்கும் பிறகு
ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார்
" மரங்களை வெட்டாதே! "


# "இறைச்சிக்காக
கால்நடைகளை அறுக்காதே!''
ஆர்ப்பாட்டம் செய்து
உண்ணா விரதமிருந்தவர்க்குப்
பாராட்டி விருந்து...
மட்டன் பிரியாணி
சிக்கன் பிரியாணி
புறா காடை
கௌதாரி சகிதம்...


# செடிகளைப் பறித்து
கீரையாய் உண்பர்
மூலிகைகள் கொய்து
மருந்தாய் உட்கொள்வர்
செடிகள் எதையும்
சிறுவர்கள் பறித்தால்...
கொதித் தெழுவர்
கண்டிப்பர்!
" செடிகளைக் கொய்யாதே!
பாவம் அவை..."


# 'உயிர்களைக் காப்போம்
உரிமைகளைக் கோருவோம்'
ஆர்ப்பாட்டம் செய்வர்
பெற்றவர்களையும் - தமக்குப்
பிறந்தவர்களையும்
முதியோர் இல்லங்களுக்கும்
விடுதிகளுக்கும்
அனுப்பிவிட்டு....!

- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

ஜனவரி 25 2007

No comments: