நம் நாட்டில்
பண்டிகைக்குப் பண்டிகை
பட்ஜெட்டுக்குப் பட்ஜெட்
இலவசமாய்
அரிசி,
சேலை, வேட்டி
காலணிகள்
மின்சாரமெனப்
பல இலவசங்களின்
அறிவிப்பு
அரசின் சார்பில்......
இலவசம் எப்படி அய்யா?
மக்களின் வரிப்பணம் தானே!
வயல்களில் உழைத்திடுவோர்
மாளிகைகள் கட்டிடுவோர்
சாலைகள் அமைத்திடுவோர்
துப்புரவு செய்திடுவோர்
சுமைவண்டி இழுத்திடுவோரெனப்
பற்பல உழைப்பாளியர்
காலம் காலமாய் நம்நாட்டில்
சமுதாயத்தின் ஏணிப்படிகளாய் -இவர்
உழைப்புக்குக் கிடைக்கும் கூலி
உண்டிக்கும் உடுப்புக்குமே.....
இவர் உயர்நிலை காண்பதெல்லாம்
கற்பனையில்! கனவுகளில்!
தேர்தலுக்குத் தேர்தல்
வீதிதோறும் கோஷங்கள்.....
'உழைப்பவர்க்கே நிலம் சொந்தம்'
'கட்டுவோருக்கும் வீடு சொந்தம்'
இயற்கையில் படைக்கப்பட்ட
நிலத்துக்கும் நீருக்கும் வரி! விலைகள்!
இலவசமாய்க் கிடைப்பதிங்கே
சுவாசிக்கும் காற்றொன்றே!
மற்ற சுகம் காண்பதெல்லாம்
கற்பனையில்! கனவுகளில்....!
-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.
தமிழோவியம்.
ஏப்ரல் 26 2007
Sunday, November 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment