மரங்கள் நிறைந்த
பரந்த தோட்டம்!
குயில் மைனா
புறா சிட்டு கிளி
காக்கை கௌதாரி
அணில் பட்டாம்பூச்சிகளின்
கானங்கள் கொஞ்சல்கள்
ஆட்டம் பாட்டங்களின்
நிகழ்விடமாய்
எப்போதும் கலகலப்பாய்!
தென்னை பனை
மா பலா முந்திரி
சீதா பப்பாளி யென
இருக்கும் பல்வகை மரங்களுடன்
இல்லாத பேய்களையும்
பாம்புகளையும் சேர்த்து
வளர்ப்பதால்
வளம் கொழிக்கிறது
தோட்டமும்
முதலாளிப் பையும்!
தன்னால் தான்
தோட்டம்
வளம் கொழிக்கிறது
என்றெ ஒவ்வொரு மரமும்
நினைக்கத் துவங்கியதால்
மரங்களுக்கிடையே
விளைச்சலுக்குச் சமமாய்
அகந்தை ஆணவம்
பொறாமை பூசல்களும்
வளமாய் செழிப்பாய்...!
தம்மோடு வாழும்
புற்பூண்டுகளை
அற்பமாய் நினைப்பதிலும்
ஏளனம் செய்வதிலும்
இளக்காரம் பேசுவதிலும்
மட்டும்
தழைத்தோங்கி இருந்தது
மரங்களுக்கிடையேயான
ஒற்றுமையும்
ஒருமைப்பாடும்!
இயற்கைக் கென்ன
சீற்றமோ?
திடீரெனப் பேய்மழையும்
புயலும் வீச
வெள்ளம் சூழ்ந்ததெங்கும்!
வெள்ளம் வடிந்தபின்
வந்து பார்த்தார்
உரிமையாளர்!
நொடிந்து போனார்
வயிற்றிலும் வாயிலும்
அடித்துக் கொண்டார்!
வேரோடு வீழ்ந்துகிடந்தன
மரங்களனைத்தும்!
உடன் அவற்றின்
அகந்தையும் ஆணவமும்
பொறாமையும் பூசல்களும்!
புற்பூண்டுகள் மட்டும்
எப்போதும் போல்
பாதிப்பு மிகையின்றி!
வீழ்ந்தபின் ஞானம் வந்து
என்ன பயன்?
-இமாம்.கவுஸ் மொய்தீன்.
வார்ப்பு.
பிரசுரிக்கப்பட்ட திகதி:2007-12-09
Tuesday, December 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment