Wednesday, July 30, 2008
கோடிகள் கொடுத்தாலும்...!!
அம்மா......!
ஊரில் இருக்கின்றார்!
கேட்போர்க்கெல்லாம்
பதிலாய் இருந்த
நிகழ் காலம்...
அவரின் மரணத்தால்
இறந்த காலமானது!
அவருக்குச் செய்த
பணிவிடைகள்
கடுகாய்ச் சுறுங்கிவிட
தவறியவை
மலை போல்
மனக்கண் முன்...!
தன் உதிரத்தை
உணவாய்
உணர்வாய்
ஊட்டியது...
தாலாட்டு பாடி
தொட்டிலாட்டி
உறங்க வைத்தது...
நிலாவை
நட்சத்திரங்களை
மின்மினிகளைக் காட்டி
சோறூட்டியது...
உடல் நலமில்லாத
நேரங்களில்
உண்ணாமல் உறங்காமல்
சேவை செய்தது...
விரல் பிடித்து
நடை எழுத்து
சித்திரம்
பழக்கியது...
மழலையைக் கேட்டுப்
பூரித்தது
புன்முறுவல் பூத்தது
பெருமை கொண்டது...
குழந்தைகட்கு
வலியேதுமென்றால்
துடித்தது துவண்டது
துயரம் கொண்டது...
ஒவ் வொன்றும்
தொடர் காட்சியாய்
நெஞ்சை
வருட...
உடன்
வைத்திருந்துப்
பணிவிடை செய்துப்
பார்த்திருந் திருக்கலாமே...!
விம்மியது இதயம்
அருவிகளாயின விழிகள்
கசக்கிப் பிழிந்தது
குற்ற மனப்பான்மை!
விலகி இருந்ததாலும்
பிரிந்து விட்டதாலும்
இழந்த சுகம்
கோடிகள் கொடுத்தாலும்
திரும்புமோ?
தமிழோவியத்தில் - இமாம் கவுஸ் மொய்தீன்.
ஜூலை 17 2008.
முத்துக்கமலத்தில் - 15.7.2008.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment