Wednesday, April 30, 2008

பந்துக்களில்லாப் பந்துகள்!!

விலை போகும்

வரையில் மட்டுமே

பந்துகட்கு

மதிப்பு மரியாதை

அலங்காரம்

கௌரவம் எல்லாம்!


ஒன்றைப் போலின்றி

ஒவ்வொன்றுக்கும்

விளையாட்டுகளுக் கொப்பத்

தனித்தனி

ஆர விட்ட எடை அளவைகள்

தோல் ரப்பர் பிளாஸ்டிக் எனத்

தனித்தனி தன்மைகள்!


வகை வகையாய்

விளையாட்டுக்கள்

அவற்றின் ஆளுமையில்

திறமை தந்திரம் உக்தி

பலம் கொண்ட வீரர்களுக்கு

வெற்றிச் சான்றிதழ்கள்

கோப்பைகள் பரிசுகள்

பணமுடிப்புகள்

பாராட்டுக்கள்!


ஊடகப் ஒளிபரப்பும்

நேரடிப் பார்வையாளர்கட்கு

காட்சியாய் இருந்ததும்

மட்டுமே

அவை கண்ட

சுகம் சொர்க்கம்!


உபயோகத்தில் வந்து

அடி உதை பட்டு

கிழிந்து உருகுலைந்து

சின்னா பின்னமான

பந்துகட்குக் கிடைத்த

கௌரவம்

குப்பைமேடுகள்!


'என்ன மனிதரிவர்?

இருந்தவரையில்

பயன்படுத்திக் கொண்டு

குப்பையில் எறிதல் தான்

மனிதப் பண்போ?'

அலுத்துக் கொண்ட பந்துக்கு

குப்பை மேடு கூறியது


'ஆட்சி அதிகாரம்

அரசியல் செல்வாக்கு எனும்

விளையாட்டுக்களில்

உம்மைக் காட்டிலும்

மிகையாய்ச் சிதைந்தவர்

மனிதரில் தான் பற்பலர்'!

- இமாம்.கவுஸ் மொய்தீன் mailto:drimamgm2001@yahoo.co.in

கீற்று. - 1.4.2008.

தமிழோவியம். - 3.4.2008.

No comments: