அன்று....
தலையைப் படிய வாரி
எண்ணெய் முகத்தில் வடிய
சீருடை முழுதாயணிந்து
சுமக்க முடியாமல்
புத்தக மூட்டையைச் சுமந்து
கூட்ட நெரிசலிலும் இடிபாடுகளிலும்
சிக்கித் தவித்துப்
பேருந்தில் பயணம் செய்து
பள்ளிக்குச் சென்றபோது
பரிகாசம் பேசியோருண்டு!
பரிதாபம் கொண்டோருண்டு!
விமர்சித்தோரும் பலருண்டு!
இன்று....
படிப்பு முடிந்துவிட்டது
பட்டம் பெற்றாகிவிட்டது
பணியும் கிடைத்துவிட்டது
கை நிறையச் சம்பளம்
வளங்கள் வசதிகள்
வாகனங்கள் ஏவலாட்களென
சொந்த வாழ்வில்....
என்னுடன் புத்தகம் சுமந்த பலரும்
என்னைப் போன்றே
வசதிகள் வளமுடன்....
பணிக்குச் செல்லும் நேரம்
பள்ளிக்குச் செல்வோரைப்
பார்க்கிறேன்!
முதுகில் புத்தக மூட்டை....
அதில் புத்தகங்களுடன்
அவரவரின் எதிர்காலம்
பெற்றோரின் கனவுகள்
கற்பனைகள் உழைப்பு
நம்பிக்கையென அனைத்தையும்
சுமந்து செல்லும் சிறார்கள்!
இதயம் பூரிக்கிறது
நம் நாட்டின்
நாளைய மன்னர்களைக்
காண்கையில்!
இன்று நாம் ஒளிர்வதைப் போல்
நாளை ஒளிர இருக்கும்
இந்தியாவின்
நம்பிக்கை நட்சத்திரங்கள்!!
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.
தமிழோவியம் - பிப்ரவரி 28 2008.
முத்துக்கமலம் - 29-2-2008.
Thursday, March 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment