என்ன குறை உன்னில் தமிழா?
என்றேனும் சிந்தித்தாயா?
சாரம் இல்லாதவனா? - நீ
சோரம் போனவனா?
உறக்கத்தில் இருக்கின்றாயா?
உணர்வின்றி இருக்கின்றாயா?
கல்வியில் உழைப்பில் திறமையில்
சிறப்பாய் இருக்கின்ற நீ!
மொழியில் இனஉணர்வில் மட்டும்
மந்தமாய் இருக்கின்றாயே!
அந்நிய மொழிகளையெல்லாம்
அழகாய் உரைக்கின்றாய் நீ!
உன்மொழி தமிழை மட்டும்
கலந்தே கதைக்கின்றாய் நீ!
கங்கை கொண்டான்
கடாரம் வென்றான் என -முன்னர்
எத்தனைப் பெருமைகள் உனக்கு!
தமிழனின் வீரம் மானம்
எல்லாமே ஏட்டில் இன்று!
அண்டையில் ஈழத்தமிழன்
அடிக்கப்படுகின்றான் ஒடுக்கப்படுகின்றான்!
அகதியாய் நாட்டை விட்டே
விரட்டப் படுகின்றான்!
தமிழகம் மட்டுமின்றி
மலேசியா சிங்கப்பூரிலும்
நிறைவாய் இருக்கும் உனக்கு...
ஈழத்தின் நிகழ்வுகள் கண்டுமோர்
கண்டனக் கணை கூடவா
தொடுக்க முடியவில்லை? ஏன்?
அந்நியம் ஆட்கொண்டதாலா? - நீ
அந்நியத்தை அரவணைத்துக் கொண்டதாலா?
தாய்ப்பால் பருகாததாலா?
புட்டிப்பால் பருகியதாலா?
என்ன குறை உன்னில் தமிழா?
இப் புத்தாண்டிலாவது சிந்திப்பாயா?
எழுதியவர்: இமாம்.கவுஸ் மொய்தீன்.
தமிழமுதம்.
04 ஜனவரி 2008.
Friday, January 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment